Archives: செப்டம்பர் 2023

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள். 

இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25).

நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.

கொடுப்பவரின் இருதயம்

எங்கள் பழைய வீட்டை காலி செய்யும் கடைசி நாளில், எனது நண்பர் தனது நான்கு வயது மகள் கின்ஸ்லீயை எங்களுக்கு வழியணுப்ப அழைத்துவந்தார். “நீங்கள் போவதை நான் விரும்பவில்லை” என்று கின்ஸ்லீ கூறினாள். நான் அவளைக் கட்டிப்பிடித்து, என்னிடமிருந்த ஒரு கையால் வர்ணம் பூசப்பட்ட கைவிசிறி ஒன்றை அவளுக்கு பரிசாகக் கொடுத்தேன். “என் ஞாபகம் உனக்கு வரும்போதெல்லாம், இந்த கைவிசிறியைப் பயன்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” என்றேன். அவள் என்னுடைய பையில் இருந்த வேறு ஒரு கைவிசிறியைப் பார்த்துவிட்டு, அதைத் தரும்படிக்கு கேட்டாள். “அது உடைந்துவிட்டது” என்று சொன்னேன். “இருப்பதிலேயே சிறந்த கைவிசிறியை உனக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று அவளிடம் சொன்னேன். அவளுக்கு சிறந்த கைவிசிறியைக் கொடுத்ததில் நான் வருத்தப்படவில்லை. அவளுடைய மகிழ்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பின்பாக ஒரு நாள், நான் உடைந்த கைவிசிறியை வைத்திருப்பதை கின்ஸ்லீ வருத்தத்துடன் அவளுடைய தாயாரிடம் சொல்லியிருக்கிறாள். அவர்கள் புதிய ஊதா நிற கைவிசிறியை எனக்கு பரிசாக அனுப்பிவைத்தனர். எனக்கு தாராளமான பரிசை கொடுத்த பின்பு கின்ஸ்லீ மகிழ்ச்சியடைந்தாள். நானும் மகிழ்ச்சியடைந்தேன். 

சுய திருப்தி மற்றும் சுய பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகில், இதயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக நாம் பதுக்கி வைக்க ஆசைப்படலாம். இருப்பினும், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் சொல்லுகிறது. அதிகமாய் செல்வத்தை ஈட்டக்கூடியதே செழிப்பு என்று நம்முடைய கலாச்சாரம் வரையறுக்கிறது. ஆனால் “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 25) என்று வேதம் சொல்லுகிறது. 

தேவனின் வரம்பற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பும் பெருந்தன்மையும் தொடர்ந்து நம்மை புத்துணர்வடையச் செய்கிறது. எல்லாவற்றையும் தாராளமாய் அள்ளிக்கொடுப்பதில் சோர்ந்துபோகாத தேவனை நாம் அறிந்திருக்கிறபடியால், நாமும் தாராளமாய் கொடுத்து, கொடுப்பவர்களின் கூட்டத்தை அதிகரிக்கச்செய்யலாம். 

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்!

உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார். 

குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம். 

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள்.

ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர். 

தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8). 

தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார். 

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6)என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.